கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வுமையம் தகவல்

      தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில், பலமான காற்று தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் தீ விபத்து 18 பேர் காயமடைந்தனர்


கடலூர் ரசாயன தொழிற்சாலையை முற்றுகையிட்ட மக்கள் மீது போலீஸ் தடியடி

       கடலூர் – சிதம்பரம் கிழக்கு கடற்கரை சாலையில் செம்மரக்குப்பத்தில் அமைந்துள்ளது ஆர்க்கிமா பெராக்சைட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டேட் என்ற தொழிற்சாலை. இந்த தொழிற்சாலைக்கு  சீனாவில் இருந்து ரசாயன திரவம் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட திரவத்தை தொழிற்சாலைக்குள் எடுத்துச் செல்லும் போது, நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையே தெரியாத அளவுக்கு கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்த தீயை, அணைப்பதற்காக ஒன்பது வாகனங்களில் வந்து இறங்கினர் தீணைப்பு வீரர்கள். சுமார் 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 18 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாக கூறினார்.
போலீஸ் தடியடி : இதனிடையே விபத்து நடைபெற்ற தொழிற்சாலையை பொது மக்கள் முற்றுகையிட சென்றனர். செம்மரக்குப்பம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அங்குள்ள தொழிற்சாலைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்தனர். விபத்துக்கு காரணமான தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனல் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-இணைய செய்தியாளர் - s.குருஜி

கடலூர் தீ விபத்து : உதவி மேலாளர் மற்றும் டெக்னீசியன் மீது வழக்கு பதிவு

       கடலூரில் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியுள்ளது. தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 18 பேர் காயமடைந்தனர். விபத்துக்கு காரணமான தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே தொழிற்சாலையின் மேலாளர் மற்றும் டெக்னீஷியன் மீது போலீசர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொழிற்சாலை தீ விபத்தின்போது எழும்பிய புகையால்,  10 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 60க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத் திணறல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரசாயன தொழிற்சாலை தீ விபத்தினால், காற்று எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என்பதை கணக்கிட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சென்னையில் இருந்து இன்று கடலூர் விரைகின்றனர்.

என்.எல்.சி., முத்தரப்பு பேச்சுவார்த்தை 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, புதுச்சேரியில் நடைபெறவிருந்த நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் மற்றும் நிர்வாகத்துக்கிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள, தொழிற்சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் வந்தும்,  நிலக்கரி சுரங்க நிர்வாகத்தின் தரப்பில் பங்கேற்க யாரும் வராததால், இந்த பேச்சுவார்த்தை வரும் 21-ம் தேதி நெய்வேலியில் நடைபெறும் என்று மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் சிவராஜ் அறிவித்தார்.  முன்னதாக, ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்ததால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு  தொழிலாளர்கள் திரும்பினார்கள்.
இந்நிலையில், உறுதியளித்த காலக் கெடுவுக்குள் எந்த கோரிக்கைகளையும் நிர்வாகம் நிறைவேற்றவில்லை எனக் கூறி மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை சில தொழிற்சங்கங்கள் அறிவித்தன.  இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் சிவராஜ் நேற்று முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கடல் அரிப்பால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்

             புதுச்சேரியை ஒட்டி அமைந்துள்ள தமிழகத்தின் சின்ன முதலியார் சாவடி எனும் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு தெருக்கள் கடலால் சூழப்பட்டுவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் கடல் அரிப்பே இதற்குக் காரணம் என்று மக்கள் கூறுகின்றனர். இவர்கள், ஊரின் மற்ற பகுதிகளும் கடல் அரிப்புக்குள்ளாகுமானால் தங்களின் நிலை என்னாகுமோ என்று அச்சம் கொள்கின்றனர்.
கடல் அரிப்பால் அழிந்து கொண்டிருக்கும் தங்கள் கிராமத்தைக் காப்பாற்ற அரசு தடுப்புச் சுவர் அமைத்துத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
புதுச்சேரியை ஒட்டி உள்ள பகுதி என்பதால், நடவடிக்கை எடுப்பதில் எல்லை ஒரு பிரச்சனையாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

   தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது நீலம் புயல். வங்கக் கடலில் சென்னைக்கு தென் கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கு மற்றும் வட கிழக்காக 130 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு மற்றும் வட மேற்காக நகர்ந்து, கடலூருக்கும் நெல்லூருக்கும் இடையே, சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 12 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், தமிழகத்தின் வடபகுதிகளிலும் புதுச்சேரியிலும் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஆந்திராவின் தெற்கு பகுதியிலும் இதே அளவு காற்றின் வேகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடல் மிக அதிக கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் யாரும் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திற்கு சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு வழித்தடங்கள் பாதிக்கப்படக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.