பல லட்ச ரூபாய் மோசடி செய்த சீட்டுக் கம்பெனி உரிமையாளரை கைது


     கடலூரில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சீட்டுக் கம்பெனி உரிமையாளரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மன்னன் உதயகுமார் என்பவர், போடி செட்டித் தெருவில் மன்னன் சிட்ஸ் என்ற பெயரில் சீட்டுக்கம்பெனி நடத்தி வருகிறார்.
   இவர், 600 ரூபாய் கட்டினால், 45 நாட்களுக்குப் பிறகு 20,000 ரூபாய் கடன் தருவதாகக் கூறி மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் வசூல் செய்துள்ளார்.
   மேலும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என சீட்டும் நடத்தி வந்திருக்கிறார். பணம் கட்டி பல மாதங்களாகியும் சொன்னபடி கடன் தராமல் உதயகுமார் காலம் கடத்தி வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் சீட்டுக் கம்பெனி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   உதயகுமார் தமிழக அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நண்பர் எனக்கூறி அவருடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சீட்டுகம்பெனியில் மாட்டிவைத்திருந்ததைக் கேள்விப்பட்ட ஆளும்கட்சித் தொண்டர்கள், உதயகுமாரால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாகக் கூறி அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
   அப்போது அங்கு வந்த காவல்துறையினர் உதயகுமாரை மீட்டு  விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடலூரில் போதையில் இருந்தவரிடமிருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல்  கடலூர் பேருந்து நிலையத்தில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
  நேற்று நள்ளிரவு காவல்துறையினர் மேற்கொண்ட ரோந்தின்போது, சந்தேகத்தின்பேரில் அவரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அவரிடம் இருந்த தங்கம் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
  போதையில் இருந்த நபர் பெயர் கிருபானந்த வாரியார் என்பதும் கடலூரை சேர்ந்த இவர் நகை தொழிலாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இவரிடம் இருந்த தங்க கட்டிகளுக்கு முறையான ஆவணம் இல்லாததால் அதுபற்றி காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள்.

கடலூரில் பொய்த்து போகும் விவசாயம்: விவசாயிகள் வேதனைபருவமழை பொய்த்து போனதாலும், தொடர் மின்வெட்டாலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குச்சிபாளையத்தில் பயிர்கள் கருகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தானே புயலின் தாக்கத்தில் உருக்குலைந்து போன விவசாயம், தற்போது பெரும் ஏமாற்றம் அளித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் விவசாயம் முற்றிலும் முடங்கிவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் அலட்சம் காட்டுவதாகவும், இதனால், 400 ஏக்கருக்கும் அதிகமாக பயிர் செய்த நிலை மாறி தற்போது 40 ஏக்கர் மட்டுமே பயிர் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
                                          - நாகை மகாகிருஷ்ணன்

கடலூரில் ஓய்வுபெற்ற காவலர்களின் பணம் பலகோடி ரூபாய் மோசடி


 

       கடலூரில் ஓய்வுபெற்ற காவலர்களின் பணம் பலகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சிதம்பரத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவலர் செல்வராஜ் என்பவர், தமக்கு வரவேண்டிய பணிக்கொடை பணம் வராதது குறித்து மாவட்ட கருவூல அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். ஆனால், அவருக்கு சேர வேண்டிய பணம் முழுவதும் வங்கி மூலம் அனுப்பப்பட்டுவிட்டதாக கருவூல அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, வங்கியில் சென்று விசாரித்தபோது, செல்வராஜுக்கு அனுப்பப்பட்டட காசோலைகள் அனைத்தும் வேறு ஒருவரது வங்கிக் கணக்கில் போடப்பட்டு, பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோன்று, கோடிக்கணக்கில் பலரது பணம், மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முரளி என்ற ஓய்வுபெற்ற காவலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் என்பவரை தேடி வருகின்றனர். இதேபோன்று, இறந்துபோன காவலர்கள் பலரது பணமும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-நாகை மகாகிருஷ்ணன்கழிவுகளால் மாசுபடும் கெடிலம் ஆறு


   டலூர் நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றில் கழிவுகள் கலப்பதால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.
இச்சம்பவம் தொடர்ந்து நடப்பதாகவும், மீன்களை நாய்களும், காகங்கள் உள்ளிட்ட பறவைகளும் தூக்கிச் சென்று ஆங்காங்கே போட்டுவிடுவதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்துக்கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையின் கழிவுகள் கலப்பதாலும், நெல்லிக்குப்பம் நகராட்சியின் கழிவு நீர் கலப்பதாலுமே கெடிலம் ஆற்றில் அவ்வப்போது மீன்கள் செத்து மிதப்பதாகவும், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
                                 இணைய செய்தியாளர் - s.குருஜி

சிதம்பரத்தில் காவலர்கள் மீது தாக்குதல்

     கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காவல்துறையினர் மீது கொள்ளையன் ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன திருட்டில் தொடர்புடைய வெற்றிச்செல்வன் என்ற கொள்ளையன் வீட்டிற்கு நள்ளிரவில் காவல்துறையினர் சென்றனர்.
அப்போது பிரபு என்ற காவலரை மதுபான பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற வெற்றிச்செல்வனை குமரேசன் என்ற காவலர் பிடிக்க முயன்றார். அவரை அரிவாள்மனையால் வெட்டிய கொள்ளையன் வெற்றிச்செல்வன் இருட்டில் தப்பியோடிவிட்டான்.
கொள்ளையனின் தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தப்பியோடிய கொள்ளையன் வெற்றிச்செல்வனை பிடிக்க கடலூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக காவல்துறையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இணைய செய்தியாளர் - s.குருஜி

எங்கிருந்து வந்தது டெங்கு?

       இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது டெங்கு. ஆப்பிரிக்க மொழியான ஸ்வாஹிலியில் இருந்து வந்ததுதான் டெங்கு என்ற சொல். ஸ்வாஹிலியில் டெங்கு என்ற சொல்லுக்குத் தீய சக்தி என்று பொருள். ஆப்பிரிக்காவில் உருவாகி இன்று உலகம் முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை ஏற்படுத்துவது டி. இ.என். எனப்படும் இந்த வைரஸ் கிருமிதான். இந்த கிருமி ஆற்றிலும் இல்லை, காற்றிலும் இல்லை. அது வாழ்வதோ இரண்டே இரண்டு இடங்களில்தான். ஒன்று மனித உடல். மற்றொன்று ஏடிஸ் ஏஜிப்டை என்ற ஒருவகை கொசு.
கொசுவைக் கண்டு அச்சம் - சிக்குன்குனியா கொசுதான் இதுவும் : பாம்பைக் கண்டால் படை நடுங்கும் என்பார்கள். இன்று டெங்கு கொசுவைக் கண்டு நாடே அஞ்சுகிறது. டெங்குவைப் பரப்பும் இந்த கொசு தமிழ்நாட்டுக்குப் புதியதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் நம்மை அச்சுறுத்திய சிக்கன்குனியா நோய்க்குக் காரணமான அதே கொசு வகைதான், இப்போது டெங்குவையும் பரப்புகிறது. பூந்தொட்டியோ, தண்ணீர் தொட்டிகளோ, பழைய டயரோ எங்கெல்லாம் தண்ணீர் தேங்குகிறதோ அங்கெல்லாம் உற்பத்தியாகும் இந்த டெங்கு கொசு.
பகலில் கடிக்கும் கொசு - நோய் பரப்பும் கொசு : மலேரியா போன்ற நோய்களைப் பரப்புகிற கொசு வகை இரவிலும், அதிகாலை வேளையிலும்தான் மனிதர்களைக் கடிக்கும். ஆனால், டெங்கு கிருமியைத் தாங்கிவரும் இந்தக் கொசு பட்டப்பகலில்தான் கடிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரிடையாகப் பரவுவதல்ல டெங்கு. டெங்கு நோய் பாதித்த ஒருவரைக் கடித்து, ரத்தம் உறிஞ்சிய பிறகு, அதே கொசு இன்னொரு நபரைக் கடிப்பதன் மூலமே டெங்கு பரவுகிறது.
அறிகுறிகள் என்னென்ன?
கடுமையான காய்ச்சல், கண்களுக்குப் பின்னால் துளைத்தெடுக்கும் தலைவலி, உடல் வலி, தடை வலி, மூட்டு வலி, சோர்வு மற்றும் தோல்களில் செந்நிறத் தடுப்பு போன்றவை டெங்கு நோய்க்கான அறிகுறிகள். இவை அனைத்தும் டெங்கு கொசு கடித்த நான்கில் இருந்து ஏழு நாட்களுக்குள் தென்படும்.
கொசுக் கடியால் ஏற்படும் மாற்றம் : டெங்கு வைரஸ் கிருமியை தாங்கி வரும் ஏடிஸ் ஏஜிப்டை கொசு ஒரு நபரைக் கடித்தால் என்ன நடக்கும். டெங்கு வைரஸ் கிருமி அந்த நபரின் தோல் பகுதியிலிருந்து ரத்த ஓட்டத்திற்குள் நுழைகிறது. அங்கிருந்து அந்த வைரஸ் கிருமி WBC எனப்படும் வெள்ளை ரத்த அணுக்களின்உட்புறம் சென்றடைகிறது. அதன் விளைவாக ஏற்படுவது தான் டெங்கு காய்ச்சல், தலைவலி, தோலில் செந்நிற தடிப்பு போன்றவை. இதன் பிறகு டெங்கு கிருமி மேலும் வலுவடைந்து மேலும் மற்ற உறுப்புகளுக்குப் பரவுகிறது. அப்போது ஏற்படுவதுதான், டெங்கு காய்ச்சலின் மற்றொரு கடுமையான பரிமாணம் டெங்கு ஹெமராஜிக் பீவர் மற்றும் டெங்கு ஷாக். டெங்கு நோய் தாக்கும் நபர்களில் 5 சதவிகிதம் பேருக்குதான் டெங்கு நோயின் கடுமையான பரிமாணம் தென்படுகிறது.
கண்டுபிடிக்கப்படாத மருந்து : எல்லோரது மனதிலும் எழும் கேள்வி, டெங்கு நோய் குணப்படுத்தக் கூடிய ஒன்றா, இதற்கு மருந்து உண்டா என்பதுதான். டெங்கு கிருமியை நேரடியாக ஒடுக்கும் மருந்து, மாத்திரை எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. மலேரியா போன்ற நோய்களுக்கு இருக்கும் மருந்துகளோ சிகிச்சையோ டெங்கு நோய்க்குக் கிடையாது. காய்ச்சலைக் குறைப்பதற்கான மருந்து, நீர்ச்சத்து இழப்பை ஈடுசெய்யும் சிகிச்சை, வலி நிவாரணிகள் என்பன போன்ற மறைமுகமான சிகிச்சைகள்தான் உள்ளன.
வரும் முன் காப்பதே நல்லது : அதனால், உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்த வழி, வருமுன் காத்துக் கொள்வதுதான். வீட்டின் அருகே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசு வலைகளைப் பயன்படுத்துங்கள். கொசுக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில், உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியுங்கள்.
-பசுமை நாயகன்