தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக
உருவெடுத்துள்ளது நீலம் புயல். வங்கக் கடலில் சென்னைக்கு தென் கிழக்கே 450
கிலோ மீட்டர் தொலைவிலும் இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கு மற்றும் வட
கிழக்காக 130 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு மற்றும் வட மேற்காக நகர்ந்து, கடலூருக்கும் நெல்லூருக்கும்
இடையே, சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 12 மணி நேரத்திற்கு
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யும் என
வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், தமிழகத்தின் வடபகுதிகளிலும் புதுச்சேரியிலும் மணிக்கு 45 முதல்
65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், ஆந்திராவின் தெற்கு
பகுதியிலும் இதே அளவு காற்றின் வேகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடல் மிக அதிக கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் யாரும்
கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திற்கு
சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு
வழித்தடங்கள் பாதிக்கப்படக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்
எச்சரித்துள்ளது.