கடலூர் – சிதம்பரம் கிழக்கு கடற்கரை சாலையில் செம்மரக்குப்பத்தில்
அமைந்துள்ளது ஆர்க்கிமா பெராக்சைட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டேட் என்ற
தொழிற்சாலை. இந்த தொழிற்சாலைக்கு சீனாவில் இருந்து ரசாயன திரவம் கொண்டு
வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட திரவத்தை தொழிற்சாலைக்குள்
எடுத்துச் செல்லும் போது, நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையே தெரியாத அளவுக்கு கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்த தீயை,
அணைப்பதற்காக ஒன்பது வாகனங்களில் வந்து இறங்கினர் தீணைப்பு வீரர்கள்.
சுமார் 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது.
தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட 18
பேர் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான
அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ,
விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாக
கூறினார்.
போலீஸ் தடியடி : இதனிடையே விபத்து நடைபெற்ற
தொழிற்சாலையை பொது மக்கள் முற்றுகையிட சென்றனர். செம்மரக்குப்பம் பகுதியில்
அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அங்குள்ள தொழிற்சாலைகளை அகற்ற வேண்டும் என
அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்தனர். விபத்துக்கு காரணமான தொழிற்சாலையை
முற்றுகையிட முயன்ற மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனல் அங்கு
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-இணைய செய்தியாளர் - s.குருஜி