கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வுமையம் தகவல்

      தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில், பலமான காற்று தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் உத்தரவிட்டுள்ளார்.