ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, புதுச்சேரியில்
நடைபெறவிருந்த நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள்
மற்றும் நிர்வாகத்துக்கிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் 21-ம்
தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள, தொழிற்சங்கங்கள் சார்பில்
நிர்வாகிகள் வந்தும், நிலக்கரி சுரங்க நிர்வாகத்தின் தரப்பில் பங்கேற்க
யாரும் வராததால், இந்த பேச்சுவார்த்தை வரும் 21-ம் தேதி நெய்வேலியில்
நடைபெறும் என்று மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் சிவராஜ் அறிவித்தார்.
முன்னதாக, ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்ததால்
போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு தொழிலாளர்கள் திரும்பினார்கள்.
இந்நிலையில், உறுதியளித்த காலக் கெடுவுக்குள் எந்த கோரிக்கைகளையும்
நிர்வாகம் நிறைவேற்றவில்லை எனக் கூறி மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை
சில தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள மத்திய
தொழிலாளர் நல உதவி ஆணையர் சிவராஜ் நேற்று முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு
அழைப்பு விடுத்திருந்தார்.