பல லட்ச ரூபாய் மோசடி செய்த சீட்டுக் கம்பெனி உரிமையாளரை கைது


     கடலூரில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சீட்டுக் கம்பெனி உரிமையாளரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மன்னன் உதயகுமார் என்பவர், போடி செட்டித் தெருவில் மன்னன் சிட்ஸ் என்ற பெயரில் சீட்டுக்கம்பெனி நடத்தி வருகிறார்.
   இவர், 600 ரூபாய் கட்டினால், 45 நாட்களுக்குப் பிறகு 20,000 ரூபாய் கடன் தருவதாகக் கூறி மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் வசூல் செய்துள்ளார்.
   மேலும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என சீட்டும் நடத்தி வந்திருக்கிறார். பணம் கட்டி பல மாதங்களாகியும் சொன்னபடி கடன் தராமல் உதயகுமார் காலம் கடத்தி வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் சீட்டுக் கம்பெனி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   உதயகுமார் தமிழக அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நண்பர் எனக்கூறி அவருடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சீட்டுகம்பெனியில் மாட்டிவைத்திருந்ததைக் கேள்விப்பட்ட ஆளும்கட்சித் தொண்டர்கள், உதயகுமாரால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாகக் கூறி அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
   அப்போது அங்கு வந்த காவல்துறையினர் உதயகுமாரை மீட்டு  விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.