எங்கிருந்து வந்தது டெங்கு?

       இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது டெங்கு. ஆப்பிரிக்க மொழியான ஸ்வாஹிலியில் இருந்து வந்ததுதான் டெங்கு என்ற சொல். ஸ்வாஹிலியில் டெங்கு என்ற சொல்லுக்குத் தீய சக்தி என்று பொருள். ஆப்பிரிக்காவில் உருவாகி இன்று உலகம் முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை ஏற்படுத்துவது டி. இ.என். எனப்படும் இந்த வைரஸ் கிருமிதான். இந்த கிருமி ஆற்றிலும் இல்லை, காற்றிலும் இல்லை. அது வாழ்வதோ இரண்டே இரண்டு இடங்களில்தான். ஒன்று மனித உடல். மற்றொன்று ஏடிஸ் ஏஜிப்டை என்ற ஒருவகை கொசு.
கொசுவைக் கண்டு அச்சம் - சிக்குன்குனியா கொசுதான் இதுவும் : பாம்பைக் கண்டால் படை நடுங்கும் என்பார்கள். இன்று டெங்கு கொசுவைக் கண்டு நாடே அஞ்சுகிறது. டெங்குவைப் பரப்பும் இந்த கொசு தமிழ்நாட்டுக்குப் புதியதல்ல. சில ஆண்டுகளுக்கு முன் நம்மை அச்சுறுத்திய சிக்கன்குனியா நோய்க்குக் காரணமான அதே கொசு வகைதான், இப்போது டெங்குவையும் பரப்புகிறது. பூந்தொட்டியோ, தண்ணீர் தொட்டிகளோ, பழைய டயரோ எங்கெல்லாம் தண்ணீர் தேங்குகிறதோ அங்கெல்லாம் உற்பத்தியாகும் இந்த டெங்கு கொசு.
பகலில் கடிக்கும் கொசு - நோய் பரப்பும் கொசு : மலேரியா போன்ற நோய்களைப் பரப்புகிற கொசு வகை இரவிலும், அதிகாலை வேளையிலும்தான் மனிதர்களைக் கடிக்கும். ஆனால், டெங்கு கிருமியைத் தாங்கிவரும் இந்தக் கொசு பட்டப்பகலில்தான் கடிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரிடையாகப் பரவுவதல்ல டெங்கு. டெங்கு நோய் பாதித்த ஒருவரைக் கடித்து, ரத்தம் உறிஞ்சிய பிறகு, அதே கொசு இன்னொரு நபரைக் கடிப்பதன் மூலமே டெங்கு பரவுகிறது.
அறிகுறிகள் என்னென்ன?
கடுமையான காய்ச்சல், கண்களுக்குப் பின்னால் துளைத்தெடுக்கும் தலைவலி, உடல் வலி, தடை வலி, மூட்டு வலி, சோர்வு மற்றும் தோல்களில் செந்நிறத் தடுப்பு போன்றவை டெங்கு நோய்க்கான அறிகுறிகள். இவை அனைத்தும் டெங்கு கொசு கடித்த நான்கில் இருந்து ஏழு நாட்களுக்குள் தென்படும்.
கொசுக் கடியால் ஏற்படும் மாற்றம் : டெங்கு வைரஸ் கிருமியை தாங்கி வரும் ஏடிஸ் ஏஜிப்டை கொசு ஒரு நபரைக் கடித்தால் என்ன நடக்கும். டெங்கு வைரஸ் கிருமி அந்த நபரின் தோல் பகுதியிலிருந்து ரத்த ஓட்டத்திற்குள் நுழைகிறது. அங்கிருந்து அந்த வைரஸ் கிருமி WBC எனப்படும் வெள்ளை ரத்த அணுக்களின்உட்புறம் சென்றடைகிறது. அதன் விளைவாக ஏற்படுவது தான் டெங்கு காய்ச்சல், தலைவலி, தோலில் செந்நிற தடிப்பு போன்றவை. இதன் பிறகு டெங்கு கிருமி மேலும் வலுவடைந்து மேலும் மற்ற உறுப்புகளுக்குப் பரவுகிறது. அப்போது ஏற்படுவதுதான், டெங்கு காய்ச்சலின் மற்றொரு கடுமையான பரிமாணம் டெங்கு ஹெமராஜிக் பீவர் மற்றும் டெங்கு ஷாக். டெங்கு நோய் தாக்கும் நபர்களில் 5 சதவிகிதம் பேருக்குதான் டெங்கு நோயின் கடுமையான பரிமாணம் தென்படுகிறது.
கண்டுபிடிக்கப்படாத மருந்து : எல்லோரது மனதிலும் எழும் கேள்வி, டெங்கு நோய் குணப்படுத்தக் கூடிய ஒன்றா, இதற்கு மருந்து உண்டா என்பதுதான். டெங்கு கிருமியை நேரடியாக ஒடுக்கும் மருந்து, மாத்திரை எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. மலேரியா போன்ற நோய்களுக்கு இருக்கும் மருந்துகளோ சிகிச்சையோ டெங்கு நோய்க்குக் கிடையாது. காய்ச்சலைக் குறைப்பதற்கான மருந்து, நீர்ச்சத்து இழப்பை ஈடுசெய்யும் சிகிச்சை, வலி நிவாரணிகள் என்பன போன்ற மறைமுகமான சிகிச்சைகள்தான் உள்ளன.
வரும் முன் காப்பதே நல்லது : அதனால், உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்த வழி, வருமுன் காத்துக் கொள்வதுதான். வீட்டின் அருகே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசு வலைகளைப் பயன்படுத்துங்கள். கொசுக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில், உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியுங்கள்.
-பசுமை நாயகன்