கடலோர மாவட்டங்களில் பலத்த மழை

       வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள நீலம் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோரா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது. சென்னை துறைமுகத்தில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை வழியாக புயல் கரை கடக்கவிருப்பதால், 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னத்தால் காசிமேட்டில் கடல்  சீற்றத்துடன் காணப்படுகிறது.  வழக்கத்தை விட கடல் அலைகள் 5 அடி உயரத்திற்கு எழுகின்றன. இதனால் காசிமேடு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 5ஆயிரம் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு்ள்ளதால், மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே, அரசு தங்களுக்கு வழங்கும் நிவாரண  உதவியை உடனடியாக அளிக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விதிவிலக்கான கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்யத் தொடங்கிய மழை, நேற்று வரை தொடர்ந்தது. ஆனால், வங்கக் கடலில் நீலம் புயல் சின்னம் உருவான பிறகு கன்னியாகுமரியில் மழை பெய்வது முற்றிலும் நின்று விட்டது. காற்றின் வேகமும் குறைந்து விட்டது.
கன்னியாகுமரிக்கு அருகே உள்ள  தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையிலும், இங்கு மழை தலை காட்டவில்லை. இங்கு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.